டாஸ்மாக் பார் உரிமங்களுக்கான டெண்டர் வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் பார் உரிமங்களுக்கான டெண்டர் வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதேவேளையில் அவற்றை இறுதி செய்து டெண்டர் வழங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது.

தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், "ஏற்கெனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்க்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க தன்னை நிர்ப்பந்திக்க முடியாது.

எனவே தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும், அதேவேளையில் இறுதி செய்து யாருக்கும் டெண்டர் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in