Published : 18 Aug 2022 06:06 PM
Last Updated : 18 Aug 2022 06:06 PM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கிவிட ‘நேருக்கு நேர்’ ஆலோசனை திட்டம் - மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக 200 வார்டு பொறியாளர்களுடன் 15 நாட்கள் ‘நேருக்கு நேர்’ ஆலோசனை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை 4 மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி தொடங்கியது. இதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முதல் கட்டத்தில் ரூ.86 கோடியில் 45.23 கி.மீ நீளத்திற்கும், உலக வங்கி நிதியில் ரூ.119.93 கோடியில் 40.92 கி.மீ நீளத்திற்கும், மூலதன நிதியில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் 2.05 கி.மீ நீளத்திற்கும், உள் கட்டமைப்பு நிதியில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 9.80 கி.மீ நீளத்திற்கும், சிங்கார சென்னை 2.0 2-வது கட்டத்தில் ரூ.70 கோடியில் 20.15 கி.மீ நீளத்திற்கும், வெள்ளத் தடுப்பு நிதியில் 291.13 கோடியில் 107 கி.மீ நீளம் என மொத்தம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மழைநீர் வடிகால் தற்போது வரை 50 முதல் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இவற்றில் ஒரு சில பணிகள் வேகமாக நடைபெற்றாலும், பெரும்பாலான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக 200 வார்டு பொறியாளர்களுடன் 15 நாட்கள் ‘நேருக்கு நேர்’ ஆலோசனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுத் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் இந்த ஆலோசனையை நடத்தவுள்ளார். இந்த நேருக்கு நேர் ஆலோசனைக் கூட்டத்திற்கு, தங்களது வார்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அனைத்து உதவிப் பொறியாளர்களும் அனைத்து தகவல்களுடன் அழைக்கும் நேரத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர்கள் கொண்டு வர வேண்டிய தகவல்களின் விவரம்:

  • ஏற்கெனவே உள்ள கால்வாய்கள் சிவப்பு நிறத்திலும், புதிய கால்வாய்கள் பச்சை நிறத்திலும் குறிப்பிட வேண்டும்.
  • தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் தண்ணீர் சென்று கால்வாய்கள் சேருவது தொடர்பாக விளக்க வேண்டும்.
  • இந்த வழித்தடங்களில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாகவும் விளக்க வேண்டும்.
  • மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பாக Program Evaluation Review Technique (PERT) Chart வைத்திருக்க வேண்டும்.

இந்த தகவல்கள் அனைத்தையும் அடுத்த 3 நாட்களுக்குள் தயார் செய்து அறிக்கையாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து உதவி பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 15 நாட்கள் இந்த நேருக்கு நேர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x