புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | "இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினியவர்" - முதல்வர் ஸ்டாலின்

புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | "இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினியவர்" - முதல்வர் ஸ்டாலின்

Published on

சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்," பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in