Published : 18 Aug 2022 12:02 PM
Last Updated : 18 Aug 2022 12:02 PM

’எங்களுடைய எண்ணம், செயல் எல்லாம் இணைப்பு மட்டுமே’ - ஓபிஎஸ்

சென்னை: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: "நிறுவனத் தலைவர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியதன் காரணமாகத்தான் அதிமுக உருவானது. அதன்பின் திமுகவா, அதிமுகவா என்ற நிலை வருகின்றபோது, அதிமுதான் அதிகமான தேர்தலில் வெற்றிவாய்ப்பைப் பெற்று ஆளுகின்ற பொறுப்பை தமிழக மக்கள் கொடுத்தனர்.

எங்களைப் பொருத்தவரை ஜனநாயக ரீதியில், ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்க்கட்சியாக மக்கள் விரோதப் போக்கை அவர்கள் கையில் எடுக்கின்றபோது அதை எதிர்க்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக இருக்கும் என்பதை தெளிவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகாலம் முதல்வராக இருந்துள்ளார். அவரோடு பயணித்திருக்கிறோம், ஒற்றுமையாக அவருடன் ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய தலையாய எண்ணம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னால் தர்மயுத்தம் தொடங்கப்பட்டு, அதன்பிறகு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தொண்டர்களின் எண்ணப்படி, கூட்டுத்தலைமையாக அதிமுக செயல்படும் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக எங்கள் பணிகளை நிறைவாக ஆற்றினோம். இதில் எந்தவித குறைபாடுகளும் அவரிடமும் இல்லை, எங்களிடமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னால், இயக்கத்தை தலைமை தாங்கி நடத்துபவர், இயக்கத்தின் அடிப்படை தொண்டர்களால் வாக்குப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் சட்டவிதி. அந்த விதியை மாற்றவோ, திருத்தம் செய்யவோ கூடாது. எந்த விதியை திருத்தினாலும், இந்த விதியை திருத்தக்கூடாது ரத்து செய்யக்கூடாது என்பதுதான், கட்சியின் சட்டவிதி. அதன்படிதான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று நாங்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

அதன்பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து, கையெழுத்திட்டபின்தான் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்ற சட்டவிதிகளை உருவாக்கி, அதன்படிதான் 4,5 ஆண்டுகாலம் நடைபெற்று வந்தது. இருவரும் கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்துதான் கட்சியின் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது. அவர்களுக்கு உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட்டதற்கு பின்னால், அடிப்படை உறுப்பினார்களால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆணையர் தலைமையில் இந்த தேர்தல் நடந்தது. அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த இணைப்பு அதிமுகவில் இருக்கக்கூடிய ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே இணைந்து இயக்கத்தை கொண்டு செல்வதுதான் எதிர்காலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னதுபோல், பல நூற்றாண்டுகள் இயக்கத்தின் ஆட்சி இருக்கும் என்ற இலக்கை அடைய உதவும்.

எங்களுடைய எண்ணம், செயல், இணைப்பு இணைப்பு இணைப்புதான். நாங்கள் இந்த அறைகூவலை விடுப்பதன் நோக்கமே, எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. இதற்குமுன் நடந்தவைகளை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம்.

எங்களைப் பொருத்தவரை, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இந்த இயக்கத்திற்கு உழைத்தவர்கள் உடன் இருந்து பாடுபட்டவர்கள், கட்சியை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இணைத்துக்கொண்டு கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். சசிகலா, டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என்று, இல்லை நாங்கள் அவர்களுடன் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். யாராக இருந்தாலும் என்பதில், சசிகலாவும் இருக்கிறார், டிடிவி தினகரனும் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x