அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து

அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து
Updated on
1 min read

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அதிமுகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அக்கட்சி நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இக்கட்சி எப்போதும்போல பலத்துடன் திகழ வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசத்துக்குக் கூட தயாராக இல்லை எனக் கூறியுள்ளார். திமுகவை ஒன்றும் பாஜக சமரசத்துக்கு அழைக்கவில்லை. பொது மக்களுக்காக அவர்களுடன் சமருக்கு (போருக்கு) தான் தயாராக உள்ளோம். யார் மீதும் காலணி வீசுவது நாகரிகமல்ல.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மண் தேங்கி உள்ளது. இதனால் படகுகள் விபத்துக்குள்ளாகி 27 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் போராடி வருகின்றனர். தமிழக அரசு மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இலங்கையில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தாலும், நாம் எல்லையை பாதுகாப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்றார்.

பேட்டியின்போது, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in