

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை வலுவிழந்து வருவதால் கரையோரத்தில் உள்ள 50 கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் இடது கரை அணைக்கரை முதல் சின்னகாரமேடு வரை சுமார் 60 கி.மீ அளவுக்கு உள்ளது. இந்த கரையோரம் கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, ஆச்சாள்புரம், எய்யலூர், ம.ஆதனூர், ஓமாம்புலியூர், குணவாசல், முட்டம், தில்லை நாயகபுரம், சி. அரசூர், குருவாடி, வெள்ளூர், மேல்பருத்திக்குடி, கீழப்பருத்திக் குடி, முள்ளங்குடி, நளன்புத்தூர், கருப்பூர், தீத்துக்குடி, வல்லத்துறை, வல்லம்படுகை, பெராம்பட்டு, ஜெயங் கொண்டப்பட்டினம், கவரப்பட்டு, கீழத்திருக்காழிப்பாளை, பெரிய காரமேடு, சின்ன காரைமேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளன.
இந்தக் கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சென்று வரும் கொள்ளி டக்கரை சாலை பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை குறுகிவலுவிழந்துள்ளது. போக்குவரத் துக்கு பயனற்ற முறையில் உள்ள இந்தச் சாலை, பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை யில் உள்ளது.
கடந்த 2010-11-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதிபங்களிப்பில் ரூ.108 கோடி ஒதுக்கப் பட்டு, இந்தச் சாலை முழுவதும் சீரமைக்கப்பட்டு தார் சாலையாக மாற்றப்பட்டது. இதனால் 50 கிராம மக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். கொள்ளிடக்கரை சாலை சீரமைக்கப்பட்டதால் கரையோர கிராம மக்களின் வாழ் வாதாரமும் மேம்பட்டது.
இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இந்த சாலை வழியாக எடுத்துச் சென்று அருகில் உள்ள சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விற்பனை செய்ய ஏதுவாக இருந்தது.
மேலும் இந்தச் சாலையின் வழியே சிதம்பரத்தில் இருந்து மேலப்பருத்திக்குடி, சிதம்பரத்தில் இருந்து வெள்ளூர் ஆகிய கிராமங்களுக்கு தனியார் மினி பேருந்து கள் இயக்கப்பட்டன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் எளிதாக நகரத்தை அடைய முடிந்தது. மாணவர்களும் எளிதாக கல்வி நிலையங்களுக்கு சென்று வந்தனர். இதனால் கரையோர கிராமங்களின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சாலையை நீர்வளத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. சாலையில் ஆண்டு தோறும் செய்யும் பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வந்து போகும் பெரு மழையால், மண் அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் சாலை குறுகியது.
சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் பராமரிப்பு இன்றி தார் சாலை மண் சாலையாக மாறியது. ஓரிரு நாட்கள் மழை பெய்தாலே இந்தச் சாலை உழுத நிலமாய் உருமாறிக் கிடக்கிறது. கரையோர கிராம மக்கள் பல முறை நீர் வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து சோர்ந்து போனது தான் மிச்சம்.
‘சாத்வீகமான முறையில் மனு அளித்தால் சரி செய்ய மாட்டார்கள்; போராட்டத்தில் இறங்கினால் தான் வேலை நடக்கும்’ என்று சிலர் கூற, அதையும் நடத்தி பார்த்து விட்டார்கள். அரசு மட்டத்தில் எந்த அசைவும் இல்லை.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைநிரம்பியது. இதனால் கீழ ணைக்கு வந்த உபரி தண்ணீர் அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சத்து 15 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது.
இதற்கிடையே கொள்ளிட ஆற்றங்கரையில் வலுவிழந்த பகுதிகளைப் பார்க்க நீர்வளத்துறை அதிகாரிகள் சென்ற போது, அவர்களின் ஜீப் செல்ல முடியாத அளவுக்கு சாலை சிறியதாக இருந்துள்ளது. இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து கிடக்க, கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் மண் மூட்டைகளைப் போட்டு, பொக்லைன் இயந்திரம்மூலம் சற்றே சரி செய்துள்ளனர். நிர்ந்தரமாக தீர்வு காணப்பட வில்லை.
பெரும் வெள்ளம் வந்தால் கரை உடையும்; அதற்கு முன் இந்தச் சாலையை நீர் வளத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு பார்வையிட்டு உடன் சரி செய்ய வேண்டும் என்று கொள்ளிடம் ஆற்றின் இடது கரையோரம் வாழும் 50 கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.