

பொதுமக்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
சுற்றுலாத் துறை மூலம் செயல்படுத்தப் படும் திட்டங்கள், துறையின் செயல்பாடு களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ள நகரங்களில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆன்மிகத் தலங்களான திருக்கடையூர், திருக்கோஷ்டியூர், ராமேசுவரம், பழநி, வாஞ்சியம் மற்றும் நவக்கிரக கோயில் கள் அமைந்துள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வழிகாட்டி பலகைகள், இருக்கைகள், குப்பைத் தொட்டிகள், பொதுக் கழிப்பிடங்கள், ஒளி விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மூலம் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் மின்விளக்கு அலங்காரப்பணி முடிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதேபோல, மற்ற சுற்றுலாத் தலங்களிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் வீராப்பூரில் உள்ள பொன்னர் சங்கர் கோயிலுக்கு உள்ளூர், வெளியூரில் இருந்து அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர். இதையடுத்து இக்கோயிலுக்கு தேவையான வசதிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, துறை செயலாளர் ராமச்சந்திரன், பொது மேலாளர் கவிதா ராமு, துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.