Last Updated : 18 Aug, 2022 06:18 AM

 

Published : 18 Aug 2022 06:18 AM
Last Updated : 18 Aug 2022 06:18 AM

கரோனா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடக்க மிக முக்கியமான பங்களித்த பத்திரிகை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை: மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மிக முக்கியமான பங்களித்த பத்திரிகை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் என்று ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ) தமிழகப் பிரிவு இணைந்து இரண்டாவது ஆண்டாக ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருது வழங்கும் விழாவை சென்னை ரஷ்யன் கலாச்சார மைய அரங்கில் நேற்று முன்தினம் நடத்தின.

விழாவில் ‘இந்து தமிழ் திசை’ சென்னை பதிப்பின் தலைமைச் செய்தியாளர் வி.தேவதாசன் வரவேற்பு உரையாற்றினார். இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபை பொதுச்செயலாளர் தங்கப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென் சென்னை, வடசென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 93 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தார்.

தமிழகம் முழுவதும் சிறப்பான அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ) தமிழ் மாநில பிரிவு தேர்வு செய்திருந்தது.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த சிறப்பான வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மருத்துவம் சார்ந்தகட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறது.

கரோனா தொற்று காலத்தில் நாளிதழின் பணி என்பது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஓர் இயக்கமாகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றினார்.

தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் பெரிய அளவிலான பங்களிப்பை செய்தன. பங்களிப்பை செய்த பத்திரிகைகளில் மிக முக்கியமான பத்திரிகை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஒன்று என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் மிகச்சிறப்பாக மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களைக் கண்டறிந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது என்பது ஒரு மதிப்புமிக்க விருது ஆகும். விருதுகளை பெறும் மருத்துவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழகப் பிரிவு தலைவர் மருத்துவர் ஆர்.பழனிசாமி, விருதுகள் தருவது மருத்துவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

எதிர்காலத்தில் அவர்கள் ஆற்றும் கடமைகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தேர்ந்தெடுத்து கொடுக்கும் 7 மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் 3 பேர் என 10 மருத்துவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் விருது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற விருது வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்படாமல் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அவர் சொன்ன அடுத்த நிமிடமே உடனடியாக சுகாதாரத் துறைச் செயலாளரை தொடர்பு கொண்டு 10 நாட்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டேன். சமூகத்தில் சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றுபவர்களுக்கு விருதுகள் தருவதுதான் சிறப்பான ஒன்று. ஏற்கெனவே, மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 30 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. 2021-ம் ஆண்டு ஆக. 5-ம் தேதி தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படுகிறது.

மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் இதுவரை 84 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தொடர் சிகிச்சைகளை 1.60 கோடி பேர் பெற்றுள்ளனர். இதுபோன்ற ஒரு திட்டம் உலக அளவில் எங்கும் இல்லை. அதனை உணர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடந்த மாதம் தமிழகம் வந்தபோது, அவரை கடலூர் மாவட்டத்தில் உள்ள முதலியார் குப்பம் கிராமத்துக்கு அழைத்துச் சென்று வீடுகளுக்கு மருந்து பெட்டகங்களை கொடுக்கச் செய்தோம்.

அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவர், இந்த திட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்பட வேண்டிய திட்டம். இது அற்புதமான திட்டம் என்று தெரிவித்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்ட அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இந்தியாவின் பிரதிநிதியாக நான் செல்ல இருக்கிறேன். அந்த மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து நீங்கள் வரவேண்டும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாநாட்டில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று உலகத்துக்கே ஒரு முன்மாதிரித் திட்டமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியானது.

மிகச் சிறந்த மருத்துவர்கள் என்று நாளிதழ் சார்பில் பாராட்டு பெறுவது என்பது உலகில் மிகப்பெரிய விருதில் எதுவாக இருக்குமோ அதை பெற்றதாக கருதி மகிழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் இந்த விருதை குடியரசுத் தலைவர் மூலம் பெற்ற விருதுக்கு ஒப்பானதாக கருதிக் கொள்ள வேண்டும். விருதுகளை பெற்ற அனைவரையும் மனதாரபாராட்டுகிறேன்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இன்னும் மூன்று மாவட்டங்களில் இதேபோன்று விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. எனக்கு நேரம் இருந்தால் நானே வந்து விருதுகளை வழங்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ நா.எழிலன்: மருத்துவர்களுக்கு விருது வழங்குவது சிறப்பு வாய்ந்தது. நோயாளிகள் குணமடைவதுதான், நமக்கு சிறந்த விருது. நோயாளிகள் நமக்கான அங்கீகாரத்தை கொடுத்ததால் தான், நாம் வெற்றிகரமான பங்கேற்பாளர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் பூரண குணமடைந்து வீடு திரும்பும் ஒவ்வொரு நோயாளியும் நமக்கு ஒரு விருது தான். தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார். அந்த வகையில், தமிழகத்தில் திராவிட சுகாதார அமைப்பு என்று தனித்துவமான ஓர் ஆய்வே நடத்தலாம்.

இங்குள்ள மண்ணின் மைந்தர்களுக்கு மருத்துவம் சரியாக போய் சேர வேண்டுமானால், இந்த மண்ணின் மைந்தர்களையே மருத்துவர்களாக்கி அழகு பார்ப்பது தான் திராவிட மாடல். தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் 91% பேர் தமிழகத்தில் தான் மருத்துவ சேவை புரிகின்றனர். அதனால் தான் மருத்துவர்-நோயாளி விகிதத்தில் நாம் பின்லாந்துக்கு
சமமாக இருக்கிறோம் என்றார்.

இந்தியன் மெடிக்கல் அசோசி யேஷன் தமிழகப் பிரிவு தலைவர் மருத்துவர் ஆர்.பழனிசாமி: கரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் செய்த பணி மற்றும் உதவியை பாராட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘மருத்துவ நட்சத்திரம்’ என்ற பெயரில் மிகச்சிறந்த விருதுகளை வழங்குகிறது. நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் விருது வழங்குவது கடினம். பொதுமக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்களை முறைப்படி தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு விருது வழங்கும் விழா இரண்டு இடங்களில் நடைபெற்றது.

இந்த ஆண்டு 4 இடங்களில் நடைபெறவுள்ளது. இன்று சென்னையில் நடைபெறுகிறது. வரும் 18-ம் தேதி (இன்று) மதுரையிலும், 20-ம் தேதி திருச்சியிலும், 27-ம் தேதி கோவையிலும் மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் விழாவை தொகுத்து வழங்கினார்.இந்த விழாவில் ஐஎம்ஏ மதிப்புறு மாநிலச் செயலாளர் மருத்துவர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் என்.ராஜேந்திரன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் பார்ட்னர்களாக ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், ரஷ்யன் கலாச்சார மையம் இணைந்திருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x