

பொன்னேரி: வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், முதல் நிலையின் 1-வது அலகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அதே நிலையின் 2-வது அலகில் கொதிகலன் நேற்று பழுது ஏற்பட்டது. இதனால், அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாளில் பணிகள் முடிந்து, 420 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.