Published : 18 Aug 2022 04:13 AM
Last Updated : 18 Aug 2022 04:13 AM

ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் மீது  விருப்பு, வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அளித்த கடிதங்கள் மீது விருப்பு, வெறுப்பின்றி நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மே 11 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற்ற விவாதம் உள்ளிட்ட நடவடிக்கை குறிப்புகள், கடந்த ஆண்டு ஆக.2-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவை ‘www.assembly.tn.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார். இதில், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அப்பாவு அளித்த பதில்கள் வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த கடிதங்கள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது?

இது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கும் சென்றுள்ளனர். அதில் எடுக்கப்படும் முடிவு ஒரு பக்கம் இருந்தாலும், பேரவையைப் பொறுத்தவரை ஜனநாயக மாண்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு பேரவை நடவடிக்கை இருக்கும் என எடுத்துக் கொள்ளலாமா?

நீதிமன்றம் வேறு, சட்டப்பேரவை வேறு. பேரவைக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதைப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி நியாயமாக முடிவெடுப்போம்.

கட்டப்பஞ்சாயத்து செய்ய பேரவைத் தலைவர் யார் என டி. ஜெயக்குமார் கேட்டுள்ளாரே?

அவரும் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தவர்தான். அவரது மனசாட்சிக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் பற்றி எனக்கு தெரியாது.

பேரவைச் செயலகத்துக்கு கடிதம் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் உள்ளதா?

யாரையும், எதுவும் கட்டுப்படுத்தாது. இதில் பழைய நடைமுறைகளைச் சொல்லி, விமர்சித்து அரசியலாக்க விரும்பவில்லை. எந்த கால தாமதமும் இல்லாமல், யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நியாயமாக, ஜனநாயகப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக 4 பிரிவாக உள்ளது. அதற்கு அரசோ, நாங்களோ காரணமில்லை. அதில் நாங்கள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை.

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறீர்களா?

நாங்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. சட்டப்பேரவைக்கு என்று தனி உரிமை உள்ளதால், அதன்படி சரியாக முடிவெடுப்போம். நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x