Published : 17 Aug 2022 07:42 PM
Last Updated : 17 Aug 2022 07:42 PM

தெருவிளக்கு பிரச்சினை: மதுரையில் ‘டெண்டர் அரசியல்’ - இருளில் மூழ்கும் சாலைகள், குடியிருப்புகள்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 55,500 தெருவிளக்குகள் உள்ளன. இதில் 35,000 தெருவிளக்குகள் பழைய 72 வார்டுகளிலும், 20,000 தெருவிளக்குகள் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளிலும் அமைந்துள்ளன.

கடந்த காலத்தில் தெரு விளக்குகள் அனைத்தும் டியூப் லைட், சிஎஃப்எல் மற்றும் சோடியம் விளக்குகளாக மட்டுமே போடப்பட்டு இருந்தன. இந்த விளக்குகளை எரிய வைப்பதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டன. அதனால், தெருவிளக்குகளுக்காக மட்டும் மாநகராட்சி நிர்வாகம், மின்கட்டணமாக ரூ.1 கோடி வரை செலுத்தி வந்ததால் நிதியிழப்பு ஏற்பட்டு வந்ததது. மின் கட்டணத்தை குறைக்க ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் ரூ.30 கோடியில் 80 சதவீதம் தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றியது. அதனால், மின்கட்டணம் 50 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் தற்போது மாநகராட்சி தெருவிளக்கு மின்கட்டணமாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை மட்டுமே செலுத்துகிறது.

கடந்த காலத்தில் தெருவிளக்குகளை பராமரிக்க மாநகராட்சியில் அதற்கான தனிப்பிரிவு செயல்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் எல்இடி பல்புகள் போட்டப்பிறகு தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு மாநகராட்சி டெண்டர் விட்டது. அவர்களுடைய டெண்டர் 2 மாதத்திற்கு முன்பே நிறைவடைந்தது. அதன்பிறகு புதிய நிறுனத்திற்கு டெண்டர் விடப்படாததால் தெருவிளக்குகளை பராமரிப்பு முற்றிலும் முடங்கிப் போனது. மாநகராட்சியிலும் தனியாருக்கு டெண்டர் விட்டதால் தெருவிளக்குகளை கையாளுவதற்கு தற்போது பணியாளர்கள் இல்லை.

ஏற்கெனவே டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு தற்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் டெண்டர் கொடுக்க விருப்பமில்லை. அதனால், அடுத்த டெண்டர் வரும் வரை அவர்கள், தெருவிளக்குகளை பராமரிக்க முடியாது என்று ஒதுங்கிவிட்டனர்.

அதனால், மாநகராட்சி 100 வார்டுகளிலும் தெருவிளக்குகளை பராமரிக்க ஆளில்லாமல் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியவில்லை. சமீபத்தில் பெய்த மழை, காற்றால் முக்கிய சாலை சந்திப்புகள், குடியிருப்பு தெருக்களில் தெருவிளக்குள் பல பழுதடைந்தன. அதனால், இரவு நேரத்தில் மதுரை மாநகராட்சி முக்கிய சாலைகள், குடியிருப்புகள் இருளில் மூழ்கிய பரிதாபம் ஏற்பட்டது. தெருவிளக்குகள் எரியாததால் சமீப காலமாக மதுரை நகர் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடக்கத் தொடங்கின. மக்கள் இரவு வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கிடம் பேசியபோது, ‘‘தெருவிளக்கு பராமரிப்பிற்கு நான்கு முறை ஏற்கெனவே டெண்டர் விட்டோம். ஆனால், யாரும் டெண்டர் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதனால், தள்ளிப்போய் வந்தது. தற்போது டெண்டர் விடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம்’’ என்றார்.

கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மேயர் தரப்பினர் விதிக்கும் சில ‘டெண்டர் அரசியல்’ நிபந்தனைகளாலே டெண்டர் எடுக்க யாரும் முன்வராமல் இருந்தனர். அதனாலே டெண்டர் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. மக்களுக்கு தெருவிளக்கு பராமரிப்பு டெண்டர் விடாததிற்கான பின்னணியும், அதற்கு பின்னால் உள்ள அரசியலும் தெரியாது. அவர்கள் கவுன்சிலர்களையும், மண்டலத் தலைவர்களையும்தான் வசைப்பாடுகின்றனர்’’ என்றனர்.

5-வது முறையாவது யாரும் ‘டெண்டர்’ எடுப்பார்களா? - தெருவிளக்கு பராமரிப்பதற்கு ஏற்கெனவே 4 முறை டெண்டர் விட்டநிலையில் யாரும் எடுக்க முன்வராத நிலையில் மீண்டும் இன்று டெண்டர் விடப்பட்டுள்ளது. 100 வார்டுகளிலும் தெருவிளக்குகளை பராமரிக்க ரூ.3 கோடிக்கு டெண்டர் விடப்படுகிறது. இதில், தெருவிளக்குகள் பழுதானால் அதற்கான பொருட்களை வாங்கிப் போட்டு எரிய வைக்க வேண்டும். பல்பு எரியாவிட்டால் அதையும் அவர்கள்தான் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

தற்போது மேயர் தரப்பினர் ஒரு நிறுவனத்தை பேசி டெண்டர் எடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டப்படி டெண்டர் எடுத்து தெருவிளக்குகளை பாரமரிக்க தொடங்கினால் ஒரு வாரத்திற்குள் அனைத்து தெருவிளக்குகளும் எரியத் தொடங்கிவிடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x