Last Updated : 17 Aug, 2022 04:48 PM

 

Published : 17 Aug 2022 04:48 PM
Last Updated : 17 Aug 2022 04:48 PM

“கொள்கையின்றி அதிமுக சீர்குலைந்து வருவதை பாஜக பயன்படுத்த விரும்புகிறது” - டி.ராஜா கருத்து

புதுச்சேரியில் இன்று தொடங்கி இரு நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றிய தேசியச் செயலர் டி.ராஜா | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: “அதிமுக கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருகிறது. இதனை பாஜக பயன்படுத்த விரும்புகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மாநில மாநாட்டினை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் அவர், "சிறுபான்மையின மக்கள் மீது எப்போதும் கண்டிராத அடக்குமுறைகள், கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தலித்துகள், பழங்குடி மக்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

ஒருபுறம் அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்றால், மற்றொருபுறம் சமூக ரீதியாக இந்தியாவில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நாடு, ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறைகள், அரசியல் சட்டம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக மதசார்ப்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை சிபிஐ வலியுறுத்தி வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.

பிஹாரில் பாஜகவுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டு நிதிஷ் குமார் வெளியேறியுள்ளார். அவர் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து புதிய ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார். பிஹாரில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு மிகவும் வரவேற்கத்தக்கது. இது பிஹார் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 தேர்தலில் இது பெறும் எழுச்சியை உருவாக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஓர் அரசியல் மையமாக செயல்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை புறக்கணித்து ஓரம்கட்டிவிட்டு மேலிருந்து தன்னுடைய ஆதிக்கத்தை திணிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மாநில உரிமைகள் மற்றும் நலன்கள் பறிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் ஒரு சட்டமன்றமாக செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. இங்கு மத்திய அரசின் ஆதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறது. இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் இரு பிரிவுகள் யோசிக்க வேண்டும். ஆனால், இப்போது அதிமுக கொள்கை இல்லாத நிலையில் சீர்குலைந்து வருகிறது. அதனை பாஜக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று டி.ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x