

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 17, 18-ம் தேதிகளில் தமிழகம் முழு வதும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டி யக்கம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், காவிரி பிரச் சினை தொடர்பாக விவாதிப் பதற்கான அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலை வர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார்.
இதில் திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, காங் கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரிய சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ.சண்முகம், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் த.வெள்ளையன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாய சங்கங் களின் கூட்டியக்கத் தலைவர் பேசும்போது, ‘‘அரசியல் தலைவர் கள் தமிழர்கள் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண் டிருப்பதை உணர முடிகிறது. இந்தக் கூட்டத்தின் மூலம் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
வி.பி.துரைசாமி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத் திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளால் காவிரி பிரச்சினை தீராது என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த தாக அனைவரும் குற்றம்சாட்டு கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஒரு தொழில்நுட் பக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உள்ள அதிகாரங்கள் எதுவும் கிடை யாது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வலு வான போராட்டங்களை நடத்த வேண்டும்.
திருமாவளவன்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், மத்திய அரசிடம் இருந்து விலகி நிற்கக் கூடாது. மத்திய அரசிடம் தொடர்ந்து பேச வேண்டும். சென்னை குலுங்குகிற அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்த வேண்டும்.
இவ்வாறு தலைவர்கள் பேசி னர்.
அதைத் தொடர்ந்து, ‘குடியரசுத் தலைவரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது, சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி மிகப்பெரிய பேரணி நடத்துவது’ என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.