

தமிழக முதல்வரின் இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து வெளியிடப்பட்ட தமிழக ஆளுநரின் அறிக்கை வரவேற்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது சிகிச்சை குறித்து அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழக மக்கள் நலன் கருதி, அரசின் அனைத்து துறைகளும் தொடர்ந்து, தொய்வின்றி செயல்பட வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதுவே மக்களுடைய எதிர்பார்ப்பு.
தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக ஆளுநரின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவினை தமாகா வரவேற்கிறது'' என்று வாசன் கூறியுள்ளார்.