Published : 17 Aug 2022 04:22 AM
Last Updated : 17 Aug 2022 04:22 AM

தேசிய தலைவராக முதல்வர் ஸ்டாலின் உயர வாய்ப்பு உருவாகியுள்ளது - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து

சென்னை: தேசியத் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உயர வாய்ப்பு உருவாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் ஏற்புரை வழங்கி திருமாவளவன் பேசியதாவது:

திராவிட மாடல் வெறும் சொல்லாடல் அல்ல. அலங்கார வார்த்தை இல்லை. கருத்தியல் போருக்கான பிரகடனம். இந்த மண்ணில்நீண்ட நெடுங்காலமாக ஆயிரம் ஆயிரம் தலைமுறையாக ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் இடையே கருத்தியல் போர் நடைபெற்று வருகிறது. ஆரியத்துக்கு எதிராக கருத்து போரை நடத்தியவர்தான் புத்தர்.

திமுக தோன்றிய நாளில் இருந்து அதை வீழ்த்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெரியார் என்ற பெரும் தீ இந்த மண்ணில் தோன்றியது. அவருடைய பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத சனாதன சக்திகள் அவரை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தன. முடியவில்லை. அவருக்கு பிறகு, நல்வாய்ப்பாக அண்ணா பெரியாரியத்தை செழுமைப்படுத்தினார். அண்ணாவுக்குப் பிறகு, யாரும்பெரியாரை பேச மாட்டார்கள் என்று எண்ணியபோது, கருணாநிதி சுயம்புவாக தோன்றினார். அவரை கடுமையாக விமர்சித்து தாக்கினர். பெரியாரியத்தை கருணாநிதி வலிமைப்படுத்தினார்.

பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார், கருணாநிதி வலிமைப்படுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியாரியத்தை முழுமைப்படுத்த வேண்டும்; முதன்மைப்படுத்த வேண்டும். அதில், குறைந்த அளவு தயக்கம்கூட இருக்கக் கூடாது.

திமுக வலிமையோடு இருப்பதற்கு சனாதன எதிர்ப்பு, பெரியாரியம்தான் அடிப்படைக் காரணம். இந்தியா முழுவதும் நம் முதல்வரைத் தான் பார்க்கிறது. நாட்டில் உள்ள ஒரே ஒரு மாநிலம்தான் பிற மாநிலத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. நம் முதல்வரின் அரசியலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

கருணாநிதிக்குப் பிறகு, திமுக இருக்காது என்று கணக்கு போட்டார்கள். எவரும் எதிர்பார்க்க முடியாத வகையில் அத்தனை கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை ஒரே அணியில் சேர்த்த பெருமை முதல்வரைத்தான் சாரும்.

இந்தியாவை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு மெகா கும்பமேளாவில் அடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை அறிவிக்கப்போகிறார்கள். நாட்டின் தலைநகரை மாற்ற போகிறோம்; நாட்டின் பெயரை மாற்ற போகிறோம் என்று கூறுகிறார்கள்.

வருணாசிரம தர்மம் அரசியல் அமைப்பு சட்டமாக மாறினால், நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. இதை யார் எதிர்ப்பது? முதல்வர் ஸ்டாலின்தான் எதிர்க்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கான தலைவர் அல்ல. தேசிய தலைவராக உயர வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு, நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x