

கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரியை முற்றுகையிட வெள்ளைக் கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்று, மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி பகுதியில் அனுமதியில்லாத இடத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்படுகிறது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அந்த மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் மலையம்பாளையம் பிரிவு அருகே இருந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று வெள்ளைக் கொடி, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். இதில், ஒருங்கிணைப்பாளர் முகிலன், திரைப்பட இயக்குநர் கவுதமன், திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் ம.சின்னசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, எஸ்டிபிஐ ரத்தினம், கொங்குநாடு மக்கள் கட்சி நட ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் வந்தவர்களை தளவாபாளையத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே சாலையில் அமர்ந்து மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்.நல்லகண்ணு, ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் 85 பெண்கள் உள்ளிட்ட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஆர்.நல்லகண்ணு கூறும்போது, “அனுமதியில்லாத இடத்தில் 15-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளப் படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை இழப்பு ஏற்படும். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மணல் குவாரிகளை நடத்தி வரும் அவரது உறவினர் ஒரத்தநாடு பாஸ்கரின் தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.