

ஹேக்கர்களின் அத்துமீறலால் தமிழக அரசின் இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
அந்தத் தகவலில், "தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in-ல் சில பக்கங்களுக்குள் நுழைய முடியவில்லை. சில ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு சர்வர் பிரச்சினைகூட காரணமாக இருக்கலாம். ஆனால், அது வெகுநேரம் நீடிக்க வாய்ப்பில்லை.
இவ்வாறாக தொடர்ந்து பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் நீடிப்பதால் குழப்பமாக இருக்கிறது. இப்போதைக்கு உடனடியாக தமிழக அரசின் இணையதள பக்கம் ஹேக்கர்களின் அத்துமீறலால் முடக்கப்பட்டிருப்பதாக உறுதியாக சொல்லிவிட முடியாது. சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக அரசின் இணையதளத்தின் சில பக்கங்கள் நேற்று (புதன்கிழமை) பின்னிரவில் முடக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவின.
தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in-ல் அரசு தரப்பிலான முக்கிய அறிவிப்புகளும், மாநிலத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
கடந்த மூன்று நாட்களாகவே இந்த இணையதளத்தின் சில பக்கங்களை முடக்க அவ்வப்போது முயற்சிகள் நடைபெற்று வந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி, பல முக்கிய ஆவணங்கள் பேக் அப் சர்வர்களில் இருந்து அழிக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாராத்தில் கூறப்படுகிறது. சில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.