Published : 17 Aug 2022 06:55 AM
Last Updated : 17 Aug 2022 06:55 AM

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் 285 பேருக்கு ரூ.67 லட்சம் கல்வி ஊக்க தொகை: ரிப்பன் மாளிகை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து மருத்துவம், பொறியியல், பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு போன்ற உயர்கல்வி படிக்கும் 285 மாணவர்களுக்கு ரூ.67 லட்சத்து 39 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

மாநகராட்சி பள்ளியில் 2021-22-ம் ஆண்டில் படித்து தற்போது உயர்கல்வி படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது,

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர். அப்போது, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில், மருத்துவம் படிக்கும் 2 பேருக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.90 ஆயிரம், பொறியியல் படிக்கும் 120 பேருக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.54 லட்சம், பட்டப் படிப்பு படிக்கும் 129 பேருக்கு தலா ரூ.7,000 வீதம் ரூ.9.03 லட்சம் உட்பட 285 பேருக்கு ரூ.67.39 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 7,254 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.44 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர். மா.சுப்பிரமணியன் பேசும்போது, “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1996-ம் ஆண்டு சேர்க்கை 50 சதவீதமாக இருந்தது. அதற்கு பிறகு இது 76 சதவீதமாக அதிகரித்தது. 2006-ம் ஆண்டு 90 சதவீதமாக அதிகரித்தது.

சிறப்பாக இருந்த மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் தற்போது 6 சதவீதம் குறைந்துள்ளது. மாநகராட்சி கல்வித் துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும்” என்றார்.

அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும்தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் காலம்தான் மாணவப் பருவம். வன யானையை போல் மாணவர்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், “மழைக் காலத்துக்குள் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் வரை நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அம்மா உணவகம் மூலமாக செயல்படுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது ஆய்வில் உள்ளது. முதல்வர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன்படி திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

இத்திட்டத்தின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 7,254 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.44 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x