Published : 17 Aug 2022 06:11 AM
Last Updated : 17 Aug 2022 06:11 AM

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு; கருத்து கேட்புக் கூட்டத்தில் வெளிநடப்பு: அமைச்சர்கள் தாமதமாக வந்ததால் மக்கள் அதிருப்தி

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து கருத்து கேட்புக் கூட்டம் தொடங்கும் முன்பே வெளியேறி முழக்கமிட்ட மக்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் கூட்டம் தொடங்கும் முன்பே வெளியேறினர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி முன்னிலை வகித்தார். எம்.பி. செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த அவர்கள் அமைச்சர்கள் வராததால் அதிருப்தி அடைந்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து வெளியேறிய பொதுமக்கள் கூறும்போது, “விமான நிலையம் அங்கு வந்தால் விவசாயத்தை நம்பியுள்ள பொதுமக்கள் முற்றிலும் பாதிக்கப்படுவர். குடியிருப்புகளை இழந்து தவிக்க வேண்டி வரும். இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்கக் கூடாது. எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே வந்தோம்.

அமைச்சர்கள் இன்னும் வரததால் வெளியேறிவிட்டோம்” என்றனர். மேலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திலேயே முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் தாமதமாக தொடங்கியது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது அங்கு விமான நிலையம் அமைக்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அங்குதான் விமான நிலையம் அமைக்கும், வேறு வழியில்லை என்று முடிவு செய்துவிட்டால் கூடுதல் இழப்பீடாவது வழங்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர்.

இவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர்கள் விமான நிலையம் அமைவதால் ஊரையே காலி செய்யமாட்டார்கள். ஒவ்வொரு ஊரில் இருந்தும் சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே எடுக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப நிலம் கையகப்படுத்தப்படுகிறது.உங்கள் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் முதல்வர் எடுக்கும் முடிவுக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஒரு கிராமத்தில் இருந்து ஒரு சிலரை மட்டும் அழைத்து வந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது. ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனியாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனி பிரச்சினை இருக்கும். அதேபோல் தனித் தனியாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x