

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இன்று அவரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய வைகோ மற்றும் அப்போது மதிமுக அவைத் தலைவராக பதவி வகித்து தற்போது திமுகவில் உள்ள மு.கண்ணப்பன் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மு.கண்ணப்பன் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. இதனால் வைகோ மீதான வழக்கு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கியூ பிரிவு போலீஸார் தரப்பில் 15 சாட்சிகள் மற்றும் 35 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வைகோவை விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இதையடுத்து மதிமுக தொண்டர்கள் வைகோவிற்கு ஆளுயர மாலையணிவித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.