Published : 22 Oct 2016 02:28 PM
Last Updated : 22 Oct 2016 02:28 PM

முதல்வர் சிகிச்சை பெறும் அறையில் நலம் விசாரிப்பு: நல்ல முன்னேற்றத்தால் ஆளுநர் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரண மாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா வுக்கு சனிக்கிழமை 30-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வ ருக்கு ஏற்கெனவே லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அப்போலோ மருத்துவமனையின் சுவாச சிகிச்சை, இதய சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களும் முதல்வ ருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த 1-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல் வரின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். இந்நிலையில், சனிக்கிழமை 2-வது முறையாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்த ஆளுநர், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார். சுமார் அரை மணி நேரம் அவர் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர், ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலி தாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று பார்த்தார். அப்போது முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி விரிவாக எடுத்துரைத்தார். அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர், மூத்த இதய சிகிச்சை மருத்துவர், சர்க்கரை நோய் சிகிச்சை, தொற்று நோய் சிகிச்சை, நாளமில்லா சுரப்பி, சுவாச சிகிச்சை மருத்து வர்கள் ஆகியோரைக் கொண்ட நிபுணர்கள் குழு முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக ஆளுநரிடம் தெரிவித் தார். முதல்வர் நன்றாக பேசி வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு நேரில் சென்ற ஆளுநர், முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரியும்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் அனைத்து திருச்சபைத் தலைவர் களும் சனிக்கிழமை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல் வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x