

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எண்ணிக்கை அடிப்படையில் அனைத்து ஜாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன் தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வினோத் மல்லி தலைமை வகித்தார். மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன் உரையாற்றினார்.
பின்னர் அவர் கூறும்போது, “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி கார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீடு வழங்குவதில் அந்தந்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன்னிய சமுதாய மக்களுக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது, உச்ச நீதிமன்றம் வரை சென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைத்து, அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
இந்த நடைமுறையை பின்பற்றி, தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும். இதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினருக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தி வருகிறார். எங்களது கோரிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.