Last Updated : 17 Aug, 2022 12:04 AM

 

Published : 17 Aug 2022 12:04 AM
Last Updated : 17 Aug 2022 12:04 AM

புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனை பட்டா - முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தாங்கி தியாகிகளுக்கு உலர் பழம் அடங்கிய தொகுப்பு, மிக்சி கிரைண்டர் வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: ‘‘தியாகிகள் போராடியதன் விளைவாக 75 ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப்பார்ப்பது அவசியமான ஒன்று. இன்று உலகம் வியக்கின்ற அளவுக்கு நம்முடைய நாட்டின் வளர்ச்சி இருப்பதை பார்க்கின்றோம். மேலும் பெரிய அளவில் வளர வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

உலகின் சிறந்த, எல்லா நிலையிலும் வளர்ச்சியடைந்த நாடாக நமது நாடு இருக்க வேண்டும் என்பது நமது தியாகத் தலைவர்களின் எண்ணம். நாட்டின் வளர்ச்சி நமது ஒற்றுமையில் தான் இருக்கின்றது. இது உலக அளவில் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது எல்லோரும் கல்வி கற்றவர்கள் என்ற நிலையில் உருவாகிக்கொண்டிருக்கிறோம். ஏழை, கட்டிடத் தொழிலாளி என எப்படிப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கு விரும்பிய பாடத்தை எடுத்து படிக்கின்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கின்றது.

மருத்துவம், பொறியியல், பல்வேறு பட்டங்கள் படித்துவிட்டு பலர் வெளியே வருகின்றனர். வெளிநாடுகளிலும் பணியில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலை புதுச்சேரியில் உள்ளது. அரசு கல்விக்கு முதலிடம் கொடுத்து நல்ல கல்வியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதிகளை கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. எல்லா கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் இருந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டுவர நடவடிக்கை எடுத்து கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் வருகின்ற நிலையில் இருக்கின்றோம். எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையிலான திட்டங்களை அரசு செல்படுத்தி வருகிறது.

வயதான காலங்களில் எவரும் சிரமப்படக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். அதற்காக ஓய்வூதியம் அரசு வழங்கி வருகிறது. எத்தனையோ திட்டங்களை மக்களின் நலனுக்காக கொண்டு வந்து செயலாற்றி வருகிறது. ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா, கூரை வீடுகளை கல் வீடுகளாக மாற்ற இலவசமாக நிதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அதில் விரிவாக பேசி ஓய்வூதியம் உயர்த்துவது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும். இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி மனைப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x