Last Updated : 16 Aug, 2022 04:25 PM

 

Published : 16 Aug 2022 04:25 PM
Last Updated : 16 Aug 2022 04:25 PM

சாத்தான்குளம் வழக்கு | ‘தந்தை, மகனின் ரத்தக்கறை ஆடைகளை குப்பை தொட்டியில் வீசிய போலீஸார்’ - கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல்

உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை போலீஸார் குப்பை தொட்டியில் வீசியதாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் காமராஜர் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் கடந்தும் கடையை திறந்து வைத்திருந்ததற்காக தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ ஏற்கெனவே 2027 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்த வாரம் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை 19.6.2020-ல் சட்டவிரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் தந்தை, மகன் இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவரையும் கடுமையாக தாக்கியதால் சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில், தரையிலும் ரத்தக்கரை படிந்துள்ளது. அந்த ரத்தக்கரையை சுத்தம் செய்யுமாறு பென்னிக்ஸை போலீஸார் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸில் ரத்தக்கரை படிந்த ஆடைகளை நீதித்துறை நடுவர் கவனிக்காமல் இருப்பதற்காக மருத்துவமனையில் வைத்து இருவரின் உடைகள் மாற்றப்பட்டுள்ளது. உடைகள் மாற்றப்பட்டதும் ரத்தக்கரை படித்த லுங்கி மற்றும் உடைகளை அங்குள்ள குப்பைத் தொட்டியில் போலீஸார் வீசியுள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில் படிந்திருந்த ரத்தம் மற்றும் இருவரையும் தாக்க பயன்படுத்திய லத்திகளில் படிந்திருந்த ரத்தக்கரையும் ஒரே வகையை சேர்ந்தது என்பது தடயவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளது என்று கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஆக. 18-ல் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x