

மதுரை: கிராமங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த சீனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக நடைபெறும்.
இந்தாண்டு பொங்கல் திருவிழாவை ஆக.19 முதல் 20 வரை நடத்த முடிவு செய்துள்ளோம். திருவிழாவுக்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. திருவிழாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த இன்று உத்தரவு: கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. பட்டு அரசி கோயில் திருவிழாவுக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் திருவிழா நடத்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.