

சென்னை: கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓவாக வலதுசாரி சிந்தனை கொண்ட ஒருவர் நியமனம் அதிர்ச்சி அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில் உள்ளபோது தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல.
சமூக நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் லட்சியமாக கொண்டு செயல்படும் திமுக அரசிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் ஒருவர் வளரும் தலைமுறையினர் உள்ளத்தில் திராவிட கொள்கைக்கு எதிரான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும்.
எனவே, தமிழக அரசு மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்து கல்வி மற்றும் ஊடகத்துறையில் தகுதியுள்ள வேறு ஒரு வல்லுநரை நியமனம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.