

சென்னை: ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை ராமாபுரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரின் பேச்சுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.
கடந்த 9 ஆண்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விவகாரத்தில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று அவருக்கு தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும். திமுக ஆட்சி அமைத்து கடந்த 15 மாதத்தில் அதைவிட நாங்கள் அதிகமான வழக்கு பதிவு செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.
இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. நான் வெளியிட்டதில் தவறு இருந்தால் அவரே அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தகவல் தெரிவிக்கட்டும்.
தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100 சதவீதம் தடைசெய்யப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்துக்கு வரும் கஞ்சா குறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் தமிழகத்துக்கு கடத்தி வருவதை உறுதி செய்து, ஆந்திராவுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதனால் 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவித்தோம். உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி. இதுபோன்ற செயல் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாம்.
சென்னையில் பருவ மழையின்போது கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புபோல இந்த ஆண்டும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 3 துறைகள் மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகள், 16 கால்வாய்களை தூர்வாரும் பணி 200 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகிறது
வளசரவாக்கம் பகுதியில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் வீடுகளுக்குள் மழை நீர் செல்லும் நிலையுள்ளது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியாக கால்வாய் ஒன்று 2 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பாக கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.