Last Updated : 07 Oct, 2016 11:53 AM

 

Published : 07 Oct 2016 11:53 AM
Last Updated : 07 Oct 2016 11:53 AM

நடப்பாண்டுக்கான நெல் கொள்முதல் விலை என்ன?- அரசு அறிவிக்காததால் குழப்பம்

காரீப் பருவம் தொடங்கியும், நடப்பாண்டுக்கான நெல்லுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்காததால் கொள்முதல் செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் காரீப் பருவம் என்பது அக்டோபர் முதல் தேதியில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்துக்கு நெல்லுக்கான கொள்முதல் விலை, ஆதார விலை, இடைநிகழ் தொகை, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை அரசு அறிவிப்பது வழக்கம்.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் கணக்குப்படி 1,36,625 ஏக்கரில் குறுவை தொகுப்பு திட்டம் மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றால் அங்கு நடப்பாண்டுக்கான விலையை இன்னும் அரசு அறிவிக்கவில்லை, அறிவிப்பு வெளியானதும் கொள்முதல் செய்யப்படும் என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமலநாதன் கூறியபோது, “காரீப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்திலேயே கொள்முதல் விலை குறித்து அரசாணை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தமிழக அரசு இதுவரை அரசாணையை வெளியிடவில்லை. கடந்த ஆண்டு குவின்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.1520-ம், பொது ரகத்துக்கு ரூ.1,460-ம் விலையாக அறிவித்தது.

இந்தாண்டு விலை கூடுதலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம். தற்போது குறுவை நெல் அறுவடை தொடங்கிவிட்டது. கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டுசெல்லும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமலேயே அங்கு அடுக்கி வைக்கப்படுகிறது. விலை அறிவிப்பு எப்போது வரும் என தெரியவில்லை. அரசு இன்னும் விலையை அறிவிக்காமல் மவுனமாக உள்ளது.

கொள்முதல் செய்ய பணியாளர்கள் வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு அதற்கான நிதியை வழங்கவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கும், கொள்முதல் பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடப்பாண்டுக்கான விலையை அறிவித்து கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.

விரைவில் புதிய அறிவிப்பு

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம் கேட்டபோது, “நடப்பாண்டுக்கான புதிய விலையை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அதுவரை கடந்த ஆண்டுக்கான விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும். விரைவில் புதிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x