

திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''அரசியல் ஆதாயங்களுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக நடத்துகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்த கூட்டும் உரிமை திமுகவுக்கு இல்லை'' என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூட திமுக எந்த முயற்சியும் செய்யவில்லை. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் தான் அனுமதி அளித்தார். எனவே, காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் தகுதி திமுகவுக்கு இல்லை'' என்றார்.