

திருச்சி மாவட்டம் கிளிக்கூடு ஊராட்சிக்கு உள்பட்ட கவுத்தரச நல்லூரில் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்களை ஞாயிற்றுக்கிழமை ஊராட்சி அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்.
தமிழக முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உள்பட்ட கிளிக்கூடு ஊராட்சி கவுத்தரச நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு வாய்க்காலைக் கடந்துதான் செல்லமுடியும். வாய்க்காலில் அதிக தண்ணீர் ஓடும் நாள்களில் வயல்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் வாய்க்காலின் குறுக்கே வயல்களுக்கு செல்ல வசதியாக பாலம் கட்டித்தரக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரி வந்தனர்.
இந்நிலையில் கவுத்தரசநல் லூரில் ரூ.40 லட்சத்தில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டும் பணிகளுக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் அந்த நிதி வேறு பணிக்கு மாற்றப்பட்டதாக தகவல் வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக் கிழமை ஊராட்சி அலுவலகத்தில் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம் ஜாபர் உசேன், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் 5 பேர் ஆகியோரை அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சிறைப்பிடித்தனர்.
வட்டாட்சியர், காவல்துறை யினர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் புதிய மதிப்பீடு தயார் செய்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பூட்டுப் போட்ட போராட்டம் கைவிடப்பட்டது