

மூவரசம்பட்டு ஏரியில் குப்பை கொட்டப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன் தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மூவரசம்பட்டு ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களும், லட்சக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஏரி, மூவரசம்பட்டு பகுதிக்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கு கிறது. கடந்த சில ஆண்டுகளாக மூவரசம்பட்டு ஊராட்சியில் சேகரிக் கப்படும் குப்பை, கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் ஏரியில் கொட்டி வருகிறது. தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், ஏரியின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது.
ஏரியை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏரியில் குப்பை கொட்ட வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. தொடர்ந்து ஏரியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மூவரசம்பட்டு மக்கள் கூறியதாவது:
ஏரியில் கொட்டப்படும் குப்பைக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால், இந்த பகுதியே புகைமூட்டமாக மாறிவிடுகிறது. குப்பையிலிருந்து வரும் துர்நாற்றம், புகையால் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பலர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்ற னர். இன்னும் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு குப்பை கொட்டினால், ஏரி முழுவதும் குப்பை மேடாக மாறிவிடும். ஏரியில் குப்பைகொட்டு வதற்கு தடை விதிக்க வேண்டும். மாற்று இடத்திலோ அல்லது பெருங்குடி குப்பைக் கொட்டும் இடத்திலோ கொண்டு சென்று குப்பையைக் கொட்ட வேண்டும். அப்போதுதான் ஏரியைக் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஏரியில் குப்பை கொட்டுவது தொடர்பாக ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசனிடம் கேட்டபோது, “மூவரசம்பட்டு ஏரியில் குப்பை கொட்டுவது தொடர்பாக சட்டப் பேரவையில் பேசினேன். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஏரியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படும். அதற்கு பதிலாக பெருங்குடியில் குப்பை கொட்டப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியில்தான் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதி குடியிருப்போர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அடுத்த வாரம் ஏரியில் குப்பை கொட்டுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்” என்றார்.
உயரம் குறைந்த பொதுக் கிணறு
மூவரசம்பட்டு பஜனை கோயில் தெருவில் பொதுக் கிணறு உள்ளது. கிணற்றின் தடுப்புச் சுவர் உயரம் குறைவாக இருப்பதால், தெருவில் விளையாடும் குழந்தைகள் கிணற்றில் விழுந்துவிடும் நிலை உள்ளது. கிணற்றின் தடுப்புச் சுவர் உயரத்தை உயர்த்தக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே குழந்தைகள் தவறி விழுந்துவிடாமல் இருக்க அப்பகுதி மக்களே கிணற்றை சுற்றி முள் வேலி போட்டுள்ளனர்.