கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகளுக்கு மோடி, புதின் இன்று அடிக்கல்: கோவாவில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்பு

கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகளுக்கு மோடி, புதின் இன்று அடிக்கல்: கோவாவில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஆகியோர் கோவாவில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகின்றனர்.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது அணு உலையில் இருந்து கடந்த ஆண்டில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதேபோல் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இந்த வளாகத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த

அணு உலைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) மதியம் கூடங்குளம் அணு வளாகத்தில் நடைபெறுகிறது.

ரூ.40 ஆயிரம் கோடி

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கோவாவில் நடைபெறும் 2 நாள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அங்கு இருந்தபடியே காணொலி காட்சி மூலம் இன்று மதியம் 1.05 மணிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, பணியைத் தொடங்கிவைக்க உள்ளனர்.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளை இந்திய அணுசக்தி கழகம் ரூ.39,747 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த 2 அணு உலைகளிலும் 2022-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் இதுவரை 12,300 மில்லியன் யூனிட்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு பணிகளுக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி கடந்த மாதம் 7-ம் தேதி நிறுத்தப்பட்டது. அணு உலையின் அனைத்து அமைப்புகளின் செயல்திறனை ஆய்வு செய்த பின், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று, நேற்று மாலை 6.14 மணிக்கு இந்த அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. உற்பத்தி தொடங்கிய 20 நிமிடங்களில் 90 மெகாவாட் வரையில் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in