Published : 04 Jun 2014 09:42 AM
Last Updated : 04 Jun 2014 09:42 AM

வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்: பொதுத் தேர்தல் துறை அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, நீக்கவோ விண்ணப்பிக்கலாம் என்று பொதுத் தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் பட்டியல்களின் தொடர் திருத்தம் தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் www.election.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (அதாவது வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சிகள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்கள், மற்ற பகுதிகளில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள்) சமர்ப்பிக்கலாம். வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமையிடத் துணை வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் இந்த தொடர் திருத்தத்தில் விண்ணப்பங்களைப் பெற நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாவர். படிவம் 6 உடன் தங்கள் வசிப்பிட முகவரி சான்று இணைக்கப்பட வேண்டும். 18 முதல் 24 வயதுடையோர் விண்ணப்பத்துடன் தங்கள் வயதுக்கான சான்றினையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

இதேபோல், தங்கள் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் படிவம் 8 மூலமும், பெயர் நீக்கலுக்கு படிவம் 7 மூலமும் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x