

காவிரி பிரச்சினைக்காக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மீறி வருகிறது.
எனவே, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்சினை யில் ஒன்றிணைந்து போராட வேண்டும். அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை.
இதையடுத்து திமுக சார்பில் அனைத் துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விவசாய அணித் தலைவர் பவன்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு விவ சாய சங்கங்களின் கூட்டியகத்தின் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்ற னர். திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என பாஜக, மதிமுக அறிவித்துள்ளன.
திருமாவளவன் ஆலோசனை
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளு டன் அக்கட்சியின் தலைவர் திருமா வளவன் நேற்று ஆலோசனை நடத்தி னார். சுமார் 4 மணி நேரம் நடை பெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ‘‘அனைத் துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்’’ என்றார்.
அதன்படி நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். ம.ந.கூ. தலைவர்களை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வைக்க கடைசிகட்ட முயற்சியில் திருமாவளவன் இறங்கியுள்ளார்.