Published : 15 Aug 2022 09:55 AM
Last Updated : 15 Aug 2022 09:55 AM

தியாகிகள் ஓய்வூதியம், அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: "மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆக.15-ம் தேதி முதல், ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியது: " எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. எத்தனையோ தியாகிகளை, போராளிகளை நம் வரலாறு கண்டிருக்கிறது. அத்தனை பொறுப்புகளையும் அஹிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது. அதனால்தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி இந்தியா்கள் என்று சொல்கிறோம்.

இந்த பெருமை அஹிம்சை எனும் வழியைகாட்டிய காந்தியடிகளையே சாரும். முதலில் நாட்டு விடுதலைக்காகவும், பின்னர் சமூக விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், மகாத்மா காந்தி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார். இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞரையும் நினைவுகூர்கிறேன்.

மாபெரும் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை நான் ஏற்றும்போது தமிழ்நாடு முதலமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் 1095 பேருக்கு மாதந்தோறும் நிதிக்கொடையை வழங்கி வருகிறோம். நாட்டுக்காக போராடியவர்களை போற்றும் வகையிலே, விடுதலை போராட்ட தியாகிகளுக்கும், அவர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பங்களுக்கும், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கக்கூடிய திட்டம் 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்திய விடுதலையுனுடைய பவள விழா நிறைவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆக.15-ம் தேதி முதல், ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து, 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x