

தருமபுரி / நாமக்கல்: பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தில் பூட்டை உடைத்த வழக்கில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த 11-ம் தேதி பாஜக சார்பில், 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா பாதயாத்திரை நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர், முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாதயாத்திரை தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் நிறைவடைந்தது.
பின்னர் அங்குள்ள பாரத மாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க பாஜகவினர் முயன்றனர். அப்போது, கதவு பூட்டப்பட்டிருந்ததால், அங்கிருந்த காப்பாளரிடம் கதவை திறக்க வலியுறுத்தினர்.
“அலுவலரின் அனுமதியின்றி கதவை திறக்க முடியாது" என அவர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பாஜகவினர் பாரத மாதாவுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பான புகாரின்பேரில், பாப்பாரப்பட்டி போலீஸார் கே.பி.ராமலிங்கம், பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று காலை பென்னாகரம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மவுனகுரு, நகர தலைவர் ஆறுமுகம், மணி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தபாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, போலீஸார் கைது செய்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கே.பி.ராமலிங்கத்தை, பென்னாகரம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.