

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், 3 வழித்தடங்களில் மொத்தம் 40 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்படி, ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிமீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. மாதவரம்-சிப்காட் சிறுசேரி வரை 45 கிமீ தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிமீ தொலைவில் (வழித்தடம்-3) மாதவரம், தபால் பெட்டி, மாதவரம் நெடுஞ்சாலை, அயனாவரம், புரசைவாக்கம், கெல்லீஸ், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, பசுமைவழிச் சாலை, திருவான்மியூரில் நிலையங்களுக்கான ஆரம்ப கட்டப் பணிகள், பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவான்மியூரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க ஆரம்பக் கட்ட கட்டமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
பூந்தமல்லி பைபாஸ்-கலங்கரை விளக்கம் வரை (வழித்தடம்-4)26.1 கிமீ தொலைவில் புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி 2019-ல் இருந்து நடைபெற்று வருகிறது.
இப்பாதை பூந்தமல்லி பைபாஸ்-கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை உயர்மட்டபாதையிலும், பவர் ஹவுஸ்-கலங்கரை விளக்கம் இடையே சுரங்கத்திலும் அமையவுள்ளது.
பவர்ஹவுஸ் - கலங்கரை விளக்கம் இடையே பனகல் பூங்கா,நந்தனம் மற்றும் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (வழித்தடம்-5) 47 கிமீ தொலைவில் சாஸ்திரி நகர், ரெட்டேரி சந்திப்பு, அண்ணாநகர் பணிமனை, அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா, கோயம்பேடு 100 அடி சாலை, விருகம்பாக்கம், ராமாபுரம், ஆலந்தூர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் எல்காட்டில் ஆரம்பக் கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. பாதைக்கு சிமென்ட் தூண்கள் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களிலும் மொத்தம் 40 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில், உயர்மட்டப் பாதையில் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டாலும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.