

சென்னை: சென்னை தினத்தை (ஆகஸ்ட் 22) முன்னிட்டு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ராஸ் நகரம் கடந்த 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானது. இது சிங்காரச் சென்னையாக வளர்ந்துள்ளது.
சென்னை உருவான ஆகஸ்ட் 22-ம் தேதி ஆண்டுதோறும் ‘சென்னை தினம்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தில் மாநகராட்சி சார்பில், சென்னை மக்களுக்காக ஓவியம், புகைப்படம், சமூக வலைதள ரீல்ஸ், குறும்படம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்கள், ‘தேசியக் கொடி’ என்பதை தலைப்பாக வைத்து, தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ஓவியங்கள் வரைந்து அனுப்பலாம். புகைப்படப் போட்டிக்கு ‘சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். சிறந்த புகைப்படங்கள் மாநகராட்சியின் சமூக ஊடக பக்கங்களில் வெளியிடப்படும்.
சமூக வலைதள ரீல்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்கள் ‘சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இயக்கி அனுப்பலாம். சிறந்த ரீல்ஸுக்கு பரிசு உண்டு. மாநகராட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறந்த ரீல்ஸ் வெளியிடப்படும்.
குறும்படப் போட்டிக்கு ‘சென்னை’ என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம். சிறந்த குறும்படம் சென்னை தின வலைதளத்திலும், மாநகராட்சியின் சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிடப்படும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை அழகுபடுத்தி, மறுவடிவமைப்பு செய்யும் வகையில் திட்ட வடிவமைப்புகளை தயார் செய்தும் பதிவேற்றம் செய்யலாம்.
சென்னை தினத்தை அனைவருக்கும் மறக்க முடியாததாக, மகிழ்ச்சியானதாக மாற்றுவதற்கு, மக்களின் பங்களிப்பை மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மக்கள் தங்கள் உள்ளீடுகளை shorturl.at/dLU89 என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி, அதில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து, படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.