Published : 15 Aug 2022 07:29 AM
Last Updated : 15 Aug 2022 07:29 AM
சென்னை: ஆட்டோ பயணத்தை முன்பதிவு செய்வதற்கான செயலியை தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு, டீசல், பெட்ரோல்,சமையல் காஸ் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
பொதுமுடக்கத்தின் போதுகூட விலை உயர்ந்ததே தவிர, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சலுகைகளோ, மானியமோவழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்டோ முன்பதிவு செயலிகள் மூலம் தொழிலாளர்களை சுரண்டி லாபம் பார்க்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை.மீட்டர் கட்டணத்தை விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம்உத்தரவிட்ட பிறகும், மாநிலஅரசு மெத்தனமாக இருக்கிறது. ஆட்டோ ஊழியர்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
விலைவாசி, எரிபொருள் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை தானாகவே மாற்றிக் கொள்ளும் வகையில், சிறந்த தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடிய டிஜிட்டல் மீட்டரை இலவசமாகக் வழங்க வேண்டும். மீட்டர்கட்டணமாக ஒரு கி.மீ.க்கு ரூ.50,அடுத்து ஒவ்வொரு கி.மீ.க்கும்ரூ.25 என நிர்ணயிக்க வேண்டும்.
கேரள அரசைப்போல தமிழக அரசும் ஆட்டோ முன்பதிவு செயலியை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்களும் அந்த செயலியைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT