

தமிழகத்தில் கடலோரங்களை ஒட்டிய பாதுகாப்பான நீர்நிலை களைத் தேடி பிளமிங்கோ பறவை கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. மிதமான தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் இவை வலம் வந்தவண்ணம் உள்ளன.
வெளிநாட்டு பறவைகள், அவற் றுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை களைத் தேடி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஆண்டுதோறும் வருவது இயல்பு. இவற்றில் பூநாரை எனப்படும் பிளமிங்கோ பறவை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து குஜராத் மற்றும் தமிழக கடற்கரைப் பகுதிகளுக்கு அதிகமாக வருகை தருகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கட லோர உப்பளங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு, செப்டம்பர் மாதத்தில் இருந்து பிளமிங்கோ பறவைகளின் வருகை தொடங்கி யது. கடந்த ஒரு வாரமாக இவற்றின் வருகை அதிகரித்துள்ளது. மணக் குடி உப்பளத்தை ஒட்டியுள்ள காயல், பொழிமுகம் பகுதி நீர்நிலைகளில் சுற்றித்திரிவதை அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை பெரும் வரவாகக் கருதுகின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜி விஸ்வநாதன் கூறும்போது, “முந்தைய ஆண்டுகளிலும் பிளமிங் கோவின் வருகை குமரி மாவட் டத்தில் அதிகமாக இருந்தது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப் பின்படி மணக்குடி காயல் பகுதி களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட கிரேட்டர் பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. பல ஜோடி ‘லெஸ்ஸர்’ பிளமிங்கோ பறவைகளும் வந்துள் ளன.
பாதுகாப்புப் பணி
கடலோர நீர்நிலைகளில் காணப்படும் மிதமான தட்பவெப்பம் அவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. இவை வரும் மார்ச் மாதம் வரை இங்கு தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அவற்றுக்கு ஏற்ற சூழலைக் காக்கும் வகையில் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்புப் பணி மேற்கொண்டு வருகிறோம். வெளிநாட்டு பறவை கள் மட்டுமின்றி இங்கு உள்ள கூழக்கிடா, வர்ணநாரை மற்றும் சிறு உள்நாட்டு பறவைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
வன உயிரின வேட்டை ஒழிக் கப்பட்டுள்ளது. இயற்கைக்கு மேலும் அழகூட்டும் பிளமிங்கோ பறவைகளின் வருகை, கன்னியா குமரியில் அதிகரித்திருப்பது சிறந்த சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
கிரேட்டர் பிளமிங்கோ
இப்பறவைகளில் அமெரிக்கன் பிளமிங்கோ, சைலியன் பிள மிங்கோ, அன்டீன் பிளமிங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ ஆகிய வகைகள் காணப்பட்டாலும் கிரேட் டர் பிளமிங்கோ வகையே, நாடு முழுவதும் பல லட்சத்துக்கு மேல் காணப்படுகின்றன. வெண்மை யுடன், இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும் இப்பறவை இயற் கைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
இதுகுறித்து சூழல் கல்வியா ளர் டேவிட்சன் கூறும்போது, “கடலோரங்களில் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் பிளமிங்கோ பறவைக்கு ஏற்ற சூழல் நிலவு கிறது. தெற்காசிய பகுதிகளுக்கு இப்பறவைகள் அதிகம் இடம் பெயர்கின்றன.
வெளிநாடுகளில் குளிர்
செப்டம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கடும் குளிரால், பிளமிங் கோவுக்கு ஏற்ற இரை வகைகள் கிடைப்பதில்லை. குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல், சீரான தட்ப வெப்ப நிலையைத் தேடி இவை இந்தியாவுக்கு வருகின்றன.
திருநெல்வேலியில் கூந்தன் குளம், தூத்துக்குடி, சென்னை, நாகப்பட்டிணம், வேதாரண்யம், கடலூர், ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக் கும் இவை அதிகம் வருகை புரி கின்றன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் அதிகமாக வருவ தற்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் மாதம் வரை இப்பறவைகள் தமிழகத்தில் இருக்கும். எனினும், குஜராத்தில் மட்டுமே நிரந்தரமாகத் தங்கி, இனப்பெருக்கம் செய் கின்றன” என்றார்.