Published : 15 Aug 2022 06:10 AM
Last Updated : 15 Aug 2022 06:10 AM

திருப்பத்தூர் | ரயில்வே தரைபாலம், மேம்பாலத்தில் மழைநீர் தேங்குவதை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே கட்டேரியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பத்தூர்: தரைபாலத்தின் அடியில் தேங்கும் மழைநீரை அகற்ற முன்வராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜோலார்பேட்டையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர், கட்டேரி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்து திருப்பத்தூர் அல்லது ஜோலார்பேட்டை பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டேரியில் இருந்து லாரி ஷெட் வழியாக உள்ள ரயில்வே தரைபாலம் அல்லது பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், மழைக்காலங்களில் ரயில்வே மேம்பாலம் மற்றும் தரை பாலம் அடியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரு கின்றனர். வாகனங்களில் மழைநீரில் மிதந்தபடி செல்வதால் இன்ஜினில் மழைநீர் நுழைந்து வாகனம் பழுதடையும் நிலையை இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வருகின்றனர்.

மேம்பாலம் அடியில் தேங்கும் மழைநீருக்கு பயந்து பலர் 3 முதல் 6 கி.மீட்டர் தொலைவுக்கு சுற்றிக் கொண்டு திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிக்கு சென்று வருகின்றனர். பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் பொது மக்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, லாரி ஷெட் பகுதியில் உள்ள ரயில்வே தரைபாலத்தை மேம்பால சாலையாக மாற்ற வேண்டும். மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு தீர்வும் காணாததால் அதிருப்திக்கு உள்ளான கட்டேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் 75-வது சுதந்தின தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஜோலார்பேட்டை கட்டேரி பகுதியில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த திருப் பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் ரவிராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கட்டேரி பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ரயில்வே தரை பாலத்தில் மழைநீர் தேங்காதவாறு அங்கு கால்வாய் அமைக்கப்படும். மழைநீர் மற்றும் கழிவுநீர் தரைபாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் அடியில் தேங்கியிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த 2 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆட்சியரிடம் அனுமதி பெற்று உடனடியாக கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்ப தாக அரசு அதிகாரிகள் உறுதி யளித்தனர்.

இதனையேற்று பொதுமக்கள் வீடுகளில் கட்டிய கருப்புக்கொடியை தானாக முன்வந்து அகற்றினர். பொது மக்களின் இந்த நூதன போராட்டத்தால் ஜோலார்பேட்டை பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x