Published : 14 Aug 2022 04:49 PM
Last Updated : 14 Aug 2022 04:49 PM

பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் விலகல் | அமைச்சர் பிடிஆருடன் நள்ளிரவு சந்திப்பின் பின்னணி என்ன?

மதுரை: பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் விலகலால் மதுரையில் அரசியல் களம் மாறியுள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாட்டத்திலும் திமுகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அமைச்சர் பிடிஆருடன் நள்ளிரவு சந்திப்பு நடந்த பின்னணி என்ன? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை விமானநிலையம் கொண்டு வரப்பட்டது.

விமானநிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜவினர் காலணிகளை வீசி தாக்கினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அங்கு ஏற்கெனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக அக்கட்சி மாநகரத் தலைவர் தலைமையில் திரண்டிருந்த பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எப்படி பாஜகவினரை அரசு நிகழ்ச்சி நடக்கும் இந்த இடத்தில் அனுமதித்தீர்கள் என்று போலீஸாரை நோக்கி கேட்டதே பாஜகவினர் அவர் கார் மீது காலணிகளை வீசுவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் கார் மீது செருப்புகளை வீசியவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு மாலை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன், நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாராஜனை கண்டித்து கடுமையாக பேசினார். இப்படி இரவு வரை மதுரை விமானநிலையத்தில் நடந்த சம்பவத்தில் நிதி அமைச்சருக்கும், திமுவினருக்கும் எதிரான மனநிலையில் இருந்த பாஜக மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன், நள்ளிரவில் திடீரென்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாராஜனை சந்தித்தார். அவரது இந்த சந்திப்பு திமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் டாக்டர் சரவணன், திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் சீட் கிடைக்காததாலேயே அவர் தேர்தல் நேரத்தில் திடீரென்று பாஜகவில் சேர்ந்த மறு நாளே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும் உடனடியாக மதுரை மாநகரத் தலைவராக டாக்டர் சரவணனை பாஜக மாநில தலைமை நியமித்தது.

அதன்பிறகு அவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானார். மதுரை மாநகரத்திலும் பாஜக சார்பில் ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். திமுக அமைச்சர்களையும், மாநகர மேயரையும் கடுமையாக விமர்ச்சித்து பேசினார். கட்சிப்பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளிலும் பணம் செலவு செய்து பெருமளவு கூட்டத்தை திரட்டினார்.

கட்சியிலும் அதிகளவு உறுப்பினர்களை சேர்த்து திமுக, அதிமுகவுக்கு மதுரை மாநகரத்தில் குடைச்சல் கொடுத்து வந்தார். பாஜகவில் நல்ல பதவியில் கவுவரமாக நடத்தப்பட்டு வந்தநிலையில் டாக்டர் சரவணவன், திடீரென்று திமுகவில் சேருவதற்கான முடிவை எடுப்பதற்கான கட்டாயம், நெருக்கடி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''டாக்டர் சரவணனை பொறுத்தவரையில் அவர் இருக்கும் கட்சிக்கு செலவு செய்யத் தயங்காதவர். ஆனால், அவர் சொன்னதை கட்சி மேலிடமே கேட்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர். அப்படிதான் சீட் கிடைக்கவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக கொஞ்சமும் பொறுமை காக்காமல் சுயநலமாக பாஜக பக்கம் வந்தார்.

அப்போதே நாங்கள் அவர் ஏற்கெனவே திமுக, அதன்பிறகு பாஜக, பிறகு மதிமுக, மீண்டும் திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து வந்தவர் என்று எச்சரித்தோம். ஆனால், கட்சித் தலைமை அதையும் மீறி எம்எல்ஏ சீட்டும், மாநகர தலைவர் பொறுப்பும் வழங்கியது.

இந்தச் சூழலில் மாநகர பொறுப்புகளில் சமீபத்தில் சில பொறுப்புகளில் கட்சித்தலைமை சிலரை சரவணன் சிபாரிசு இல்லாமல் நியமனம் செய்தது. அதில், டாக்டர் சரணவனுக்கும், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், டாக்டர் சரவணன், தொழில் ரீதியாக சில வழக்குகளை சந்தித்து வருகிறார். அந்த வழக்குகளால் தனக்கு திமுகவினரால் எதுவும் நெருக்கடி வருமோ என்ற அச்சத்திலும் இருந்தார். அதனால், அவர் திமுக பக்கம் ஏற்கெனவே தாவுவதற்கு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மூலமே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்தச் சூழலில் டாக்டர் சரவணனே எதிர்பாராத சூழலில் பாஜகவினர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்புகளை வீசிவிட்டனர்.

அதனால், தான் திமுக பக்கம் போவதில் சிக்கல் ஏற்படுமோ என்று எண்ணினார். விமானநிலையம் சம்பவத்தில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் அரசியல் ரீதியாக சில நெருக்கடி ஏற்பட்டது. அதனால், அவர் திட்டமிட்டப்படி சரவணனை திமுக பக்கம் இழுப்பதற்கு முன், அவரையே தன்னை சந்திக்க வைத்து வருத்தம் கேட்கும் நிகழ்வை நடத்தினார்.

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் டாக்டர் சரவணனை திமுக மேலிடம் கட்சியில் மீண்டும் சேர்க்குமா? என்பது தெரியவில்லை,'' என்றனர்.

இதற்கிடையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டாக்டர் சரவணனை கட்சியில் இருந்து நீக்கினார். டாக்டர் சரவணன் ஏற்கெனவே திமுகவில் இருந்ததால் அவர் மீது அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். அவர் கட்சியில் மீண்டும் சேர்வதை அவர்களே விரும்பாதநிலையில், பாஜகவினரோ அவர் கட்சியைவிட்டு வெளியேறுதை போஸ்டர் ஓட்டிக் கொண்டாடி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x