Published : 14 Aug 2022 03:55 PM
Last Updated : 14 Aug 2022 03:55 PM

பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்: அண்ணாமலை 

சென்னை: "மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அந்தப் பகுதியில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜகவினரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் அரசு நிகழ்ச்சிக்கு இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அமைச்சரின் கார் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், நேற்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் Ex MLA, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியு, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x