Published : 14 Aug 2022 09:05 AM
Last Updated : 14 Aug 2022 09:05 AM

நீலகிரியில் மழை பாதிப்பு பகுதிகளை சீரமைக்க ரூ.51 கோடி தேவை: ஆ.ராசா தகவல்

தென்மேற்கு பருவமழையால் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்.

உதகை - மஞ்சூர் சாலை கல்லக்கொரை – எம்.பாலாடா பகுதியில் கன மழையால் சேதமடைந்த சாலை, இத்தலார் பகுதியில் சேதமடைந்த தடுப்புச்சுவர், லாரன்ஸ் பகுதியில் சேதமடைந்த தோட்டம், எடக்காடு பகுதியில் மண் சரிவால் சேதமடைந்த இடங்கள் உள்ளிட்டவற்றின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, நிவாரண உதவித்தொகைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆ.ராசா கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும், உதவித்தொகை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அரசுக்குதிட்ட வரைவுகள் சமர்ப்பிக்குமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்க ரூ.51 கோடி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள், வேளாண்மை உட்பட பல்வேறு துறைகள் மூலமாக கணக்கிடப்பட்டு வருகிறது. விரைவாக, தொடர்புடைய துறை அமைச்சர்கள் மூலமாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், உதகை நகர்மன்ற துணைத் தலைவர் ஜெ.ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், முன்னாள் கொறடா பா.முபாரக், உதகை கோட்டாட்சியர் துரைசாமி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x