பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்பட திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூகநலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணை:

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 1,14.095 தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 2022-2023-ம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் க.இளம்பகவத்தை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர், நகர்ப்புறங்களில் திட்டம் செயல்பட ஏதுவாக மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்பட ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தலை உறுதி செய்தல், காலை சிற்றுண்டி தயாரிக்கப்படும் சமையல் கூடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் உரிய நேரத்தில் உணவு சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in