Published : 14 Aug 2022 04:09 AM
Last Updated : 14 Aug 2022 04:09 AM

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் - சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்து, வேலுநாச்சியாரின் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.

சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேறவுள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலுமான இசையார்ந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

இதனை கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் அரங்கேற்றுகிறது. இதில் 62 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் நாடகம் அரங்கேற்றம் செய்யப்படுவதற்கான பதாகையை வெளியிட்டு, அரங்கேற்றத்தைத் தொடங்கி வைத்தார்.

மறைக்கப்பட்ட வரலாறு

ஆங்கிலேயர்களுடனான போராட்டத்தில் ஜான்சி ராணி தோற்றார், ஆனால் வேலு நாச்சியார் வெற்றி கண்டார். அவரது மறைக்கப்பட்ட வரலாறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறோம் என்ற வகையில் நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 1 மணி நேரம் நடந்த நாடகத்தை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். பின்னர் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் வைக்கப்பட் டிருந்த வேலு நாச்சியாரின் உருவப்படத்துக்கு முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, இயல், இசை, நாடகமன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவுக்கு முதல்வர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்வில், த.வேலு எம்எல்ஏ, பண்பாட்டுத்துறைச் செயலர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு, மதுரை, திருச்சி, கோவையிலும் அரங்கேற்றம்

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி, ஈரோடு, சிஎன்சி கல்லூரியில் ஆக.15-ம் தேதியும், மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் ஆக.21-ம் தேதியும், திருச்சி கலையரங்கத்தில் ஆக.22-ம் தேதியும், கோவை, இந்துஸ்தான் கல்லூரியில் ஆக.28-ம் தேதியும் நடைபெற வுள்ளது. இதில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இலவசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x