Published : 14 Aug 2022 06:29 AM
Last Updated : 14 Aug 2022 06:29 AM

பெண்கள் பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் - முதல்வர் அறிவுரை

சென்னை: பெண்கள் பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் புத்தகப் பைகளை வழங்கினார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் நான் சுற்றுச் சுழன்று பணியாற்றி வந்தாலும், என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது, நான் அடையக்கூடிய மகிழ்ச்சி என்பது அலாதியானது.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அந்தத் துறையினுடைய அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். பத்தில் ஒரு கல்லூரியை நான் கோரிக்கை வைக்காமலேயே நம்முடைய தொகுதிக்கு அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2021 நவம்பர் 2-ம் தேதி நான் தொடங்கி வைத்தேன்.

பி.காம். பிபிஏ. பிசிஏ. பிஎஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாட பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2021 டிச.3-ம் தேதி சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்புக்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே 220 மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் முதலாம் ஆண்டு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது பல்கலைக்கழக தேர்வுகள் முடிவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.

இந்தக் கல்வியாண்டில் புதிதாக பி.ஏ. சைவ சித்தாந்தம் என்ற பாட பிரிவு சேர்க்கப்பட்டு, இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இருக்ககூடிய 240 இடங்களுக்கு 1,089 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஐந்தில் ஒருவருக்குத்தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு இக்கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது.

இரண்டாம் ஆண்டுக் கல்வியை இன்று தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு புதிதாக சேரவிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளும் கல்வி கட்டணமின்றி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக் கூடிய உண்மையான அக்கறையால், இந்த அரசு செய்யக்கூடிய கடமையாக இதனை நாங்கள் கருதுகிறோம்.

ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியைத் தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையைப் பெண்கள் அனைவரும் பெற வேண்டும்.

இதை நான், ஒரு எம்எல்ஏவாக அல்ல, முதல்வராக அல்ல, உங்கள் தந்தையாகவே நின்று இந்த நேரத்தில் உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்து சமய அறநிலைய துறையானது, இந்தக் கல்லூரிக்கு இன்னும் கூடுதலான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும். இதைவிடப் பெரிய கட்டிடத்தைக் கட்டித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x