

செங்கை/திருவள்ளூர்: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 17-ம் தேதி தொடங்கி செப்.2-ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.
மறைமலை நகர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தொழில் கடன் மேளா கிளை அலுவலகம் முதல் தளம், எம்.ஜி.ஆர் சாலை, மறைமலை நகர் என்ற முகவரியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது: இந்த மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில்முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலதனத் திட்டங்கள் உட்பட மானிய திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் ரூ.1.50 கோடி வரை கடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மேளாவில் அளிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9445023494, 9342654834, 9445023507, 9444396821 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் மேளா நடக்கிறது. இங்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) குறித்து விளக்கம் தரப்படும்.
இந்த காலத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 044-26257664, 26248644 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.