

சிப்பெட் தலைமை அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிளாஸ்டிக் தொழில் நுட்ப பொறியியல் நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது. இதை டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிப்பெட் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை கைவிடக்கோரியும் ஊழியர் சங்கங்களின் சார்பில் ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டம் சிப்பெட் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் உட்பட100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக வளர்ச்சி பாதிக்கும்
ஆர்ப்பாட்டத்தில் தா.பாண் டியன் பேசும்போது, “இந்தியா வில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில்தான் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது இங்குள்ள சிப்பெட் தலைமை அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, இதனை யாருக்காவது தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சிப்பெட்டை இடம் மாற்றம் செய்யக்கூடாது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்து மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்” என்றார்.