

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து போக்குவரத்தை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக ரூ.1 சிறப்புக் கட்டணத்தில் தனிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருநள்ளாறில் மாணவர்களுக்கான ரூ.1 கட்டண சிறப்புப் பேருந்துகள் நேற்று காலை இயக்கிவைக்கப்பட்டன. இதற்காக திருநள்ளாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 சிறப்பு பேருந்துகளை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒரு பேருந்து அம்பகரத்தூரிலிருந்து கருக்கன்குடி வழியாக காரைக்காலை சென்றடையும். மற்றொரு பேருந்து அம்பகரத்தூர், தென்னங்குடி, மாதூர், செல்லூர், திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்குச் செல்லும்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பார்த்திபன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.